
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கீழக்கரை கிராமத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (16.03.2025) நடைபெற்றது. இதனைத் தமிழக வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இப்போட்டியைத் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ஆயிரம் காளைகள் பங்கேற்ற நிலையில் 650 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்படி போட்டி தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்றது.
அந்த வகையில் மேலக்கால் கிராமம், உட்கட்டை கச்சிராயிருப்பு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் மகேஷ் பாண்டி (வயது 24) மாடுபிடி வீரராக களத்தில் இருந்தார். அப்பொழுது அவரது மார்பில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று கொம்பால் குத்தியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மகேஷ் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயம் அவரது உடல் பிரேதப் பரிசோதனை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்று (17.03.2025) நடைபெற்றது. இதனையடுத்து அவரது உடல் மகேஷ் பாண்டியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருந்தது. இத்தகைய சூழலில் தான் மகேஷ் பாண்டியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு உள்ள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மகேஷ் பாண்டியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அச்சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாடு முட்டியதில் மகேஷ் பாண்டி பலத்த காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மகேஷ் பாண்டியின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.