கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் நடமாடும் மளிகை, காய்கறி அங்காடி திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். ஐந்தாயிரம் மூன்று சக்கரத் தள்ளுவண்டி, 2,000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மாளிகைப்பொருள், காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக 400 வண்டிகளில் மளிகைப் பொருள், காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் அதிகளவில் வெளியே வருவதைத் தடுக்கும் விதமாக வியாபாரிகளுடன் இணைந்து மாநகராட்சி இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய யார் முன் வந்தாலும் உடனே அனுமதி தரப்படும்.கரோனாவால் சென்னையில் அச்சப்படக் கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை.வீடு, வீடாக ஆய்வு செய்யும் போது மக்கள் மறைக்காமல் தங்களிடம் உள்ள உடல் நலப் பிரச்சனைகளை கூற வேண்டும்" என்றார்.