Skip to main content

"எங்களது சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம்"- ஜி.கே.வாசன் எம்.பி. பேட்டி...

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

tamilnadu state congress party g.k.vasan mp press meet

வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களது சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

 

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி., "50 ஆண்டுகளில் இந்த உலகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் மாறி மாறி நடந்தது. ஆனால் வரப்பிரசாதமாக இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் கீழ் மதுரைக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மதுரை நகரம் மட்டுமல்லாது மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களும் இதனால் பயன்பெறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இது மிகப்பெரிய சாதனை என நான் உணருகிறேன். இந்த மருத்துவமனையில் தொடக்கம் ஒரு காலக்கெடுவுக்குள் நடைபெறும் என்பது தென் மாவட்ட மக்களின் விருப்பம், அதற்கு ஏற்றவாறு இதனுடைய உட்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

எய்ம்ஸ் மருத்துவமனையின் நிதி தொகையையும் படிப்படியாக உயர்த்திக் கொள்ள வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மிக விரைவில் நடைபெற வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக விரிவாக விளக்கமாக எடுத்துரைத்துவிட்டார். அந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

 

'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்தை மதுரை நகருக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. அத்தகைய 'ஸ்மார்ட் சிட்டி' அந்த சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பணிகள் எல்லாம் விரைந்து நடைபெற வேண்டும். ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதற்காக விரைவாக ஒரு குழு அமைக்க வேண்டும்.

 

டெல்லியில் நமது விவசாயிகள், ஹரியானா போன்ற பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 4- ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும் என நான் வேண்டுகிறேன்.

 

அப்பாவி விவசாயிகளை எதிர்க்கட்சிகளுக்காக தூண்டிவிட்டு விவசாயம் செய்பவர்களுக்கு நடுவிலே தரகர்களோடு கைகோர்த்துக்கொண்டு உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக கூட்டணி குறித்து தமிழகத்தின் முதல்வர் பேசும்பொழுது சென்ற பாராளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வில் இருந்த கட்சிகள் அதே கூட்டணியோடு இருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்து கிடையாது என்று கூறியுள்ளார்.

 

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில் கூட்டணி தர்மம் கொடுத்து நடப்பார்கள் என நம்புகிறேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒருங்கிணைப்பாளர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியோடு முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்துவிட்டார். எங்களது முதல் குறிக்கோள் அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும். அந்த உறுதியான நிலையில் கூட்டணியிலே இருக்கிறோம் அதுதான் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணியின் இனி வியூகமாக இருக்க வேண்டும்.

 

அதற்குப் பிறகு தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். விரைவில் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு மூன்று மாதங்களே உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் கிராம சபைக் கூட்டம் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று என்பது தான் மக்களின் எண்ணமாக உள்ளது. இது தேவையில்லாத ஒரு கூட்டத்தைத் திணிக்கும் போது மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இன்று நடைபெற்ற சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பமாக ஜனநாயக கட்சியாக  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் வெல்லக் கூடிய நல்ல வியூகத்தை ஏற்படுத்தி உள்ளோம். எங்களது அற்புதமான செயல் இருக்கும். 7 பேர் விடுதலை  என்றால் என்ன, அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலை என்ன, இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன, என்று தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சிகளுக்கும் தெரியும்.

 

ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற முறையில் சொல்கிறேன், நிச்சயமாக எங்களது சின்னத்தில் தான்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். ரஜினிகாந்த் என் மரியாதைக்கு உரியவர், அவர் உடல் நலம் சரியில்லை. அதன் அடிப்படையில் அவர் இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்துவிட்டார். அது யாராக இருந்தாலும் பொருந்தும், எனக்காக இருந்தாலும் பொருந்தும். ஆகையால் சுட்டிக்காட்டி தவறாக பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவர் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் நெருங்கும் போது அந்த முடிவை அவர் எடுப்பார் என நான் நம்புகிறேன். 

 

மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். நிச்சயமாக தி.மு.க.வில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. மதுரை மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்றியவர் அழகிரி. மத்திய அமைச்சராகவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார் என்பதில் மாற்று கிடையாது" என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்