திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக அமைச்சராகவும் இருந்தவர் க.அன்பழகன். திராவிட சித்தாந்தத்தை வாழும் காலம் வரை கடைப்பிடித்த அவருக்கு தற்போது நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நூற்றாண்டு விழா நிறைவுப் பொதுக்கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பேராசிரியரின் திராவிட இயக்க சித்தாந்தம் பற்றிச் சிலாகித்துப் பேசினார்கள். நிறைவாகப் பேசிய தமிழக முதல்வர் அவர் குறித்து பேசிய பேச்சுக்கள் அனைவரையும் நெகிழ வைக்கும் வகையிலிருந்தது. இதுதொடர்பாக பேசிய அவர், " கலைஞரின் ஆற்றல், செயல்திறன் ஸ்டாலினிடம் உள்ள என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் பேராசிரியர். ஸ்டாலின் கலைஞருக்கு மட்டும் வாரிசு இல்லை, எனக்கு அவர் வாரிசுதான் என்றார். ஸ்டாலினைப் போல் இன்னும் 100 ஸ்டாலின்கள் இந்த இயக்கத்துக்குத் தேவை என்று என் உழைப்பை அங்கீகரித்தவர்.
வாரிசு வாரிசு என்று என்று இன்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே அந்த வாரிசு குற்றச்சாட்டை என் மீது சுமத்திய போது கல்வெட்டு போல் பாராட்டு பத்திரம் கொடுத்தவர் க.அன்பழகன். கட்சியின் செயல் தலைவராக என்னை முன்மொழிந்தவரும் அவர்தான். அடுத்த தலைமுறையைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாகக் கூறியவர், அவருக்கு திமுக எப்போதும் கடமைப்பட்டுள்ளது" என்றார்