கோவையில் அரசு பேருந்தின் பின்பக்கத்தைப் பிடித்துக் கொண்டு வெளிநாட்டவர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் வீலில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்நிலையில் கோவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தின் பின்புறத்தில் உள்ள ஏணியை பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் வீலில் பயணம் செய்துள்ளார். கோவை என்பது அதிகப்படியான வெளிநாட்டவர்கள் சுற்றுலா வரும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டம் என்பதாலும், மிக முக்கிய சுற்றுலாத் தளமான நீலகிரி கோவையை ஒட்டியுள்ளது என்பதாலும் கோவை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து சுற்றுலா பயணங்களைத் தொடங்குகின்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் வேறு பகுதிக்குச் செல்வதற்காக அரசு பேருந்தில் பின்புறம் உள்ள ஏணி கம்பியைப் பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் வீலில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆபத்தை உணராமல் பயணித்துள்ளார். கோவையின் மிகப் பரபரப்பான சாலைகளில் ஒன்று அவினாசி சாலை. வாகனங்கள் அதிகம் செல்லக்கூடிய அச்சாலையில் வெளிநாட்டவர் இப்படி ஸ்கேட்டிங் வீலில் பயணித்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.