Skip to main content

தமிழகத்தில் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ் பேரணி; மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு (படங்கள்)

Published on 16/04/2023 | Edited on 16/04/2023

 

 

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

சென்னையை பொறுத்தவரை கொரட்டூரிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் பகுதியிலும் என இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியுள்ளது. கொரட்டூரில் தொடங்கியுள்ள ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்து ஆர்.எஸ்.எஸ் உடையணிந்து பேரணியைத் துவங்கியுள்ளார். சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

 

கொரட்டூரில் இருக்கும் விவேகானந்தா வித்தியாலயா பள்ளியிலிருந்து தற்போது ஊர்வலமாக தொடங்கி நடந்து வருகிறார்கள். இந்த பேரணியானது முக்கிய சாலையில் வழியாக சென்று மீண்டும் அதே விவேகானந்தா பள்ளியில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 12 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிற மதங்கள், பிற சமூகங்கள் குறித்து எந்த ஒரு வாசகங்களையும் இவர்கள் எழுப்பக் கூடாது; காவல்துறை அனுமதி வழங்கி இருக்கக்கூடிய இடங்களில் மட்டும்தான் சாலையில் இடது புறமாக செல்ல வேண்டும்; போக்குவரத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது; இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்ற அமைப்புகள் குறித்து இவர்கள் எந்த கருத்துக்களும் எழுப்பக்கூடாது; கைகளில் கத்தி ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை ஏந்திச் செல்லக்கூடாது உள்ளிட்ட 12 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

 

கொரட்டூரை பொறுத்தவரை 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதேபோல் தமிழகத்தின் மற்ற பகுதிகளான கோவை, மதுரை, உதகை உள்ளிட்ட இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்