
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா(28). திருவான்மியூரைச் சேர்ந்த இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து தொடரில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது நடிகை சித்ரா தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை குறித்து தகவலறிந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரின் தொலைபேசியை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவுக்கு பல்வேறு நடிகை, நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.