
சேலம் அருகே, 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்த சேலம் நீதிமன்றம், இயற்கை மரணம் அடையும் வரை அவரை சிறையில் அடைத்து வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ் சாலையைச் சேர்ந்த ராமன் மகன் ராஜா என்கிற போத்துராஜா (24). கடந்த 2018- ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவருடைய பெற்றோர், வீட்டிலேயே பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி தனது கடைக்கு அழைத்துச்சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதை சிறுமியின் தாயார் நேரில் பார்த்துவிட்டார். அதிர்ச்சி அடைந்த அவர், இச்சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் போத்துராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கடந்த 2018- ஆம் ஆண்டு ஏப். 17- ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே போத்துராஜா ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியம் அளித்தார். இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் நவ. 19- ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட போத்து ராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, இத்தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பைக் கேட்டதும் குற்றவாளியின் பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
அதை தொடர்ந்து போத்துராஜா சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு, சாகும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.