Skip to main content

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

rameshwaram fisher man issue cm mk stalin wrote letter to union government 

 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் உரிய அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இதையடுத்து நெடுந்தீவு அருகே இரு படகுகளில் 15 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு இரு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ளனர்.

 

கடந்த சில தினங்களாக இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாத நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கடலுக்குத் திரும்பிய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 15 மீனவர்களையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதையடுத்து இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரியும், இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 4 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

rameshwaram fisher man issue cm mk stalin wrote letter to union government 

 

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்திய - இலங்கை இடையிலான கடல் பகுதியை நம்பி பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளனர் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவார். எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமையைக் காக்கவும் சுமுக தீர்வு காண வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையின் செயல் மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்