Skip to main content

ஓமலூர் சுங்கச்சாவடியில் கிருமி நாசினி தெளிப்பு! 

Published on 03/05/2020 | Edited on 03/05/2020
omalur




சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடி பகுதியில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் சார்ந்த பகுதியாக இருப்பதால் சுங்கச்சாவடி அருகில் உள்ள 5 கி.மீ. சுற்றளவிற்கு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதிக்குள் வெளியாள்கள் நுழையவும், அங்கிருப்பவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 


கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்து சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. 


இப்பணிகளை, கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சேலம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஸ்குமார், ஏடிஜிபி மஞ்சுநாதா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ராமன், எஸ்பி தீபா கனிகர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (மே 1) ஆய்வு மேற்கொண்டனர்.


சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரில் சென்று அவர்களின் வீடுகளில் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான ஒட்டு வில்லைகளை ஒட்டி, அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வீட்டை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.


கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் பகுதிகளான ஓமலூர் சுங்கச்சாவடி, மேட்டூர் வட்டம், சேலம் கேம்ப் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் சார்ந்த பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 


சுகாதாரத்துறை, வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வீடுகள்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 


தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் ஆய்வுக்கு வருகை தரும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். 


இதையடுத்து மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணிகள் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.


ராஜ்ய சபா எம்பி சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மேட்டூர் சார் ஆட்சியர் சரவணவன், நகராடசிகள் நிர்வாக இயக்குநர் அசோக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்