சேலம் அருகே உள்ள சித்தனூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). வெள்ளிக் கொலுசு தயாரிப்பு தொழில் செய்துவந்தார். இவருடைய தாயார் பெரிய தாய் (வயது 70). இவர், தனது கடைசி மகன் சந்தோஷ் (வயது 35) என்பவருடன் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூரில் வசித்து வருகிறார்.
இரு நாள்களுக்கு முன்பு செல்வம், தாயாரைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது சந்தோஷுக்கும், செல்வத்துக்கும் இடையே சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பூர்வீகச் சொத்தை எந்தக் காரணம் கொண்டும் விற்க முடியாது என்று முட்டுக்கட்டை போட்டுள்ளார் செல்வம். இதனால், ஆத்திரம் அடைந்த சந்தோஷ், தான் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்துவந்து செல்வத்தை சுட்டுக்கொன்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார் சந்தோஷை கைது செய்தனர். விசாரணையில், செல்வம் பயன்படுத்தியது உரிமம் பெறாத துப்பாக்கி என்பது தெரியவந்தது.
தேர்தல் நேரத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படும். இதையும் மீறி சந்தோஷ் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது எப்படி என விசாரித்தபோதுதான் அவர், வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிக்குட்டையைச் சேர்ந்த சின்ராஜ் (வயது 55) என்பவரிடம் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கி தயாரித்து வாங்கியிருப்பது தெரியவந்தது.
பெரிய புத்தூரைச் சேர்ந்த இளையராமன் (வயது 51) என்பவர்தான் முயல் வேட்டைக்கு நாட்டுத் துப்பாக்கி தேவை என்று கூறி, சின்ராஜிடம் விலைக்கு வாங்கியிருக்கிறார். அவர் மூலமாக சந்தோஷுக்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. சொத்து பாகப் பிரிவினைக்கு முட்டுக்கட்டையாக இருந்த செல்வத்தை தீர்த்துக்கட்ட வேண்டும் என சந்தோஷ் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்பிருந்தே திட்டமிட்டு இருந்ததும், அத்திட்டப்படிதான் இளையராமன் மூலமாக சின்ராஜிடம் கள்ளத்துப்பாக்கியை தயாரித்து வாங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சின்ராஜ், இளையராமன் ஆகிய இருவரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர்.