சேலம் அருகே, வனக்கிராம மக்கள் வசித்து வந்த குடிசைகளை வனத்துறையினர் இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்திய சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் அருகே, ஜல்லூத்து மலை மற்றும் ஜருகுமலை ஆகியவற்றுக்கு இடையே சூரியூர் பள்ளக்காடு வனக்கிராமம் உள்ளது. இங்கு 77 குடும்பத்தினர் பல தலைமுறைகளாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரக அதிகாரிகள், அவர்கள் வசிக்கும் பகுதி வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடுகள் என்றும், அங்கே அந்நியர்கள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதி என்றும் கூறி, அவர்களை தங்களின் குடிசைகளை அப்புறப்படுத்துமாறு கூறி நோட்டீஸ் அளித்தனர்.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதாரமாக காட்டிய சூரியூர் பள்ளக்காடு வனக்கிராம மக்கள், குடிசைகளை அகற்ற முடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து கடந்த திங்கள்கிழமை (ஜன. 27) வனத்துறையினர், பொக்லின், புல்டோசர் இயந்திரங்களை கொண்டு சென்று சூரியூரில் போடப்பட்டிருந்த குடிசைகள், கீற்றுக்கொட்டகைகள் ஆகியவற்றை இடித்து அகற்றினர். அரளி, மல்லிகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த விளை நிலங்களையும் சேதப்படுத்தினர்.
இந்நிலையில், வனக்கிராம மக்கள் சார்பில் வழக்கறிஞர் ஷாஜகான் சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வனத்துறையினர் செயல்பட்டதாக மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், வனத்துறையினர் எந்த உத்தரவின்பேரில் சூரியூரில் வசித்த 77 குடும்பத்தினரை அப்புறப்படுத்தினர் என்பதை விசாரித்து, அதற்கான நகலை பெற்று அனுப்ப வேண்டும். இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜாராம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்படுகிறது என்றும், விசாரணை அறிக்கையை 10 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜாராம், செவ்வாய்க்கிழமை (ஜன. 28) சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட வனக்கிராம மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். இடித்து அகற்றப்பட்ட வீடுகள், குடிசைகள் மற்றும் அரளிப்பூ, வெங்காயம், மல்லிகை பயிரிடப்பட்ட நிலங்கள் அழிக்கப்பட்டதையும், கிணறு மூடப்பட்டதையும் பார்வையிட்டார்.
இதுகுறித்து, விசாரணை அதிகாரி ராஜாராம் கூறுகையில், ''நீதிமன்றம் உத்தரவிட்டதும், நான் என்னுடைய விசாரணையை துவக்கி விட்டேன். பனமரத்துப்பட்டி காவல்நிலையம் சென்று, ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்ற விவரங்களை சேகரித்தேன்.
சூரியூர் பள்ளக்காட்டில் வனக்கிராம மக்கள் வசித்து வந்த வீடுகள், குடிசைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. விவசாய நிலங்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. வீடுகள், விவசாய நிலங்களை இயந்திரங்களைக் கொண்டு நாசப்படுத்தியதில் வனத்துறையினர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளனர்,'' என்றார்.