திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மொ.நா. பூங்கொடி பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்பு சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மற்றும் வடிகால் வாரியத்தில் செயல் இயக்குநராக பணிபுரிந்த செ.சரவணன் திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது மாவட்ட ஆட்சியராக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டார். பதவியேற்கும் முன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை இல்லத்தில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவரை வாழ்த்திய அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைதியான மாவட்டம், அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழும் மாவட்டம் சிறப்பான முறையில் பணியாற்றி மக்கள் நலனுக்கான திட்டங்களை தடையின்றி நிறைவேற்றுங்கள் என வாழ்த்தினார். திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், மைலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் கே.செல்வன், தாயார் பெயர் எஸ்.பாப்பாள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு ஆர்.பிரியதர்ஷினி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பள்ளிக் கல்வியை அரசு பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியை அரசு கல்லூரியில் படித்தார். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) தேர்வுக்காக அரசு பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றார். ஐ.டி. துறையில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் 2015-ஆம் ஆண்டு இந்திய வருவாய்த் துறையில் பணியாற்றினார்.
2016-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தமிழக பிரிவில் தேர்ச்சி பெற்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சியாக தனது பணியை தொடங்கி, பின்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றினார். அப்போது, காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம்-2019 ஒருங்கிணைப்பு செய்தல் பணிகள் சிறப்பாக மேற்கொண்டார். ஈரோடு வணிக வரித் துறையில் இணை ஆணையர், ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் இயக்குநர் மற்றும் மதுரையில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஆகவும் பணியாற்றியுள்ளார். மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மற்றும் வடிகால் வாரியத்தில் செயல் இயக்குநராக பணிபுரிந்தபோது தமிழக முதல்வரால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டு இன்று(04.02.2025) செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.