நாளை(05/02/2025) ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெற இருக்கின்ற நிலையில் வரும் 08/02/2025 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய சிஐஎஸ்எப் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க வாக்குச்சாவடிகளில் பந்தல் போடப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான வசதிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் உள்ள 237 வாக்குச்சாவடிகளில் ஒன்பது வாக்குச்சாவடிகள் பதட்டமானது என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவுக்கு தேவையான பொருட்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. வாக்காளர்களின் தகவல்கள் அடங்கிய கையேடு, விரலில் வைக்கும் மை, சீல் வைக்கும் பொருட்கள் என அனைத்தும் அனுப்பி வைக்கப்படும் வருகிறது.