இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று (03-02-25) முதல் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவரது உரையில், ''ஏழை மக்களின் நிலையை புரிந்து கொண்டுள்ளது பாஜக அரசு. ஏழைகள் மழைக்காலத்தில் கூரை இன்றி அவதிப்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் வீடு இல்லாத 4 கோடி பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குழாய்களில் நீர் தரப்பட்டுள்ளது. ஏழை மக்களின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். சாமானிய. நடுத்தர மக்களை முன்னேற்றிக் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.
கள நிலவரத்தை அறிந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும் போது மாற்றம் உண்டாகிறது. மக்களின் நிலைமையைப் புரிந்துகொள்ள சிலருக்கு கடினமாக. இருக்கிறது. இதுபோன்ற இன்னல்களை சிலரால் (எதிர்க்கட்சிகளை மறைமுகமாக) உணர முடியாது. சில தலைவர்கள் சொகுசு இல்லங்களில் வாழ்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் வறுமை மறைந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர். மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு சேர்ப்பது அரசியல் கட்சிகளின் வேலை. 10 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சேவையாற்றுவதற்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.