கள்ளக்குறிச்சியில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மீது பெண் ஒருவர் மாட்டு சாணத்தை அடித்துத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவத்தன்று பெண் விஏஓ தமிழரசி பணியில் இருந்துள்ளார். அப்பொழுது சங்கீதா என்பவர் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து தமிழரசி மீது தாக்குதல் நடத்தியதோடு மாட்டுச் சாணத்தை அவர் மீது வீசியுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் சங்கீதா அதே அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்த நிலையில், அண்மையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
தாக்குதல் நடத்திய சங்கீதா
இதனால் ஆத்திரத்தில் இருந்த சங்கீதா இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஆபீசில் இருந்தேன் சார் திடீரென பின்பக்கத்தில் பார்வையில் தெரியாத மாதிரி உள்ளே வந்த சங்கீதா கவரில் இருந்த மாட்டு சாணத்தை எடுத்து மூஞ்சியில் அடித்ததோடு என்னை இழுத்து கீழே போட்டு தாக்கினார். 'இது என்னுடைய ஊரு நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன். யார் வந்து உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று பார்க்கிறேன். உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' எனச் சொல்லி கதவை மூடிக்கொண்டு தாக்க ஆரம்பித்தார்'' என தெரிவித்துள்ளார். பெண் கிராம நிர்வாக அலுவலர் பட்டப்பகலில் இப்படி தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.