Skip to main content

100 பவுன் நகையுடன் ரூ.35 லட்சம் கொள்ளை! கொள்ளையர்களை மடக்கி பிடித்த காக்கிகள்!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020


கோயில் நிர்வாகி வீட்டுக்குள் புகுந்து 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 லட்சத்தைக் காரில் வந்த மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. அவர்களில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

 

திண்டுக்கல் அருகே உள்ள அகரம் சுக்காம்பட்டி சேர்ந்த துரை ஆதித்தன் என்பவர் சுக்காம்பட்டி சித்தர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் இவர் திருவேங்கட மலை சாமி சித்தர் ஆலயம் என்ற கோயில் கட்டி அதை நிர்வாகித்து வருகிறார். அவர் கட்டிடங்கள் கட்டுவதற்கான வாஸ்து சாஸ்திரமும் செய்து வருகிறார். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே ஆதித்தன் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று மதியம் துரை ஆதித்தன் தனது மனைவி ரேவதி, மகள் வித்தியா, மகன் மனோஜ் மற்றும் மருமகன் ரமேஷ் ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துரை ஆதித்தனை சந்தித்துப் பேசவேண்டும் என்று கூறியபடி வீட்டுக்குள் நுழைந்த உடனே அந்த நபர்கள் வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டி விட்டுத் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து துறை ஆதித்தனின் குடும்பத்தினரை மிரட்டினர்.

 

சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிய அவர்கள் துரை ஆதித்தன் கையை மட்டும் பிளாஸ்டிக் டேபிள் கட்டிப்போட்டனர். பின்னர் அந்தக் கும்பல் வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் அலமாரிகளை உடைத்து ரூபாய் 35 லட்சம் மற்றும் 100 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்து விட்டு, வீட்டில் இருந்த அனைவரையும் வீட்டுக்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு அந்த கும்பல் நகைப் பணத்துடன் தப்பி ஓடியது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆதித்தியன் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தபடி காப்பாத்துங்க காப்பாதுங்க எனக்  குரல் எழுப்பினர். அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து துரை ஆதித்தன் வீட்டைத் திறந்து அவர்களைக் காப்பாற்றினார்கள்.

 

அதன் பின்னர் இதுகுறித்து துரை ஆதித்தன், தாடிக் கொம்பு போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தி விட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர்.

 

இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு காரில் தப்பி ஓடியவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொன்னமராவதி போலீசார் அவர்களை சல்லடை போட்டு தேடினர். இந்த நிலையில் அங்குள்ள தச்சம்பட்டி பகுதியில் கொள்ளையர்கள் வந்த காரை போலீசார் மடக்கினர். அப்போது காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று ஐந்து பேரை பிடித்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அந்த காரில் கொள்ளையர்கள் கடத்தி வந்த பணம் நகைகள் அப்படியே இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

 

பின்னர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த அஜித். சந்தோஷ். கல்யாணசுந்தரம், செல்ல பாண்டியன் கலைஞானம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர். பிடிபட்ட அவர்களிடமிருந்து 54 பவுன் நகைகள் மற்றும் 35 லட்சத்து 6 ஆயிரத்து 949 ரூபாய் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதன் பின் பிடிபட்ட கொள்ளையர்களிடம் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் அருண் சக்திகுமார் மற்றும் மதுரை சிவகங்கை திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

http://onelink.to/nknapp

 

அதோடு கொள்ளையர்களை விரட்டி சென்று பிடித்த போலீசாரையும் புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்ட் பாராட்டினார். இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்