தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை பா.ஜ.க. என்ற வகையிலும், அரசியல் எதிரி தி.மு.க. என்ற வகையிலும் பேசி இருந்தார். மேலும், விஜய் தன்னுடைய உரையில் திராவிடமும், தமிழ்த் தேசியமும் இரு கண்கள் என்று கூறியிருந்தார். மேலும் இந்த மாநாட்டில் பேசும் போது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் தான் த.வெ.க. மாநாடு நடத்த நிலம் வழங்கிய விக்கிரவாண்டி வி.சாலை விவசாயிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று (23.11.2024) விருந்தளிக்க உள்ளார். இதற்காக சுமார் 300 விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் மோதரம் அணிவித்துக் கௌரவப்படுத்தினார். பின்னர் அவர்களுக்கு சைவ விருந்து அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு விஜய் இந்த வி.சாலையை தேர்ந்தெடுத்தார். அப்போது அந்த விவசாயிகளிடம் இடம் கேட்கச் சென்றபோது தளபதி என்று சொன்னவுடனேயே எல்லோரும் இடம் கொடுக்க முன்வந்தார்கள்.அவர்கள் கொடுத்த இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி மாநாடு நடைபெற்றது. அதன் காரணமாக இடம் கொடுத்த விவசாயிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கௌரவித்து அனுப்பிவைத்தோம் என்றார்.