சிதம்பரம் லப்பை தெரு பள்ளி வாசலில் பணம் வசூல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக பள்ளிவாசல் நிர்வாகத்தில் உள்ள ஜியாவுதீன், ஜாகிர் உசேன், ஹலீம் ஆகியோர் மீது அதே பள்ளிவாசலில் உறுப்பினராக உள்ள சாகுல் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவுசெய்யப்பட்டதை கண்டித்தும், விசாரணை இன்றி பதிவு செய்யப்பட்ட போலி வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சிதம்பரம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை மதியம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அப்போது காவல்துறையினர் இவர்களை சிதம்பர நகர காவல் நிலையம் முன்பு பேரிக்காடு அமைத்து தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் பிரதான சாலையாக உள்ள மேலவீதியில் தரையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் பள்ளிவாசல் சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதால் அதனை தடுப்பதால் இது போன்ற வழக்குகள் போடுவதாகவும் குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினார்கள். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் போராட்டக்காரர்களிடம் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.