Skip to main content

ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுபெறும் வயது வரம்பை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு... தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

chennai high court

 

ஓய்வுபெறும் வயது நீட்டிப்பை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசு ஊழியர்களுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு சமீபத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும், ஓய்வு வயதை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் குறித்தும், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலுவையில் இருந்தும் பணியில் தொடரும் அரசு ஊழியர்கள் குறித்தும், அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, எந்த ஆதாரமும் இல்லாமல், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு அபராதம் விதிக்கத்தக்கதுதான் என்றபோதும், அதைத் தவிர்ப்பதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்