ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார்.
ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது