கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார்.
இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.