2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.
அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம். சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும், தாவரங்கள், மரங்கள் குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம், உடல்நலம் குறித்து விசாரித்தோம்.
“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு, நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள் உறுதி செய்துவிட்டு, “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.