Skip to main content

ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம்! வீட்டிற்கு ஒருவர் தற்கொலை செய்வோம்! N.L.C.க்கு எதிராக திரண்ட 50 கிராம விவசாயிகள்! 

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

 

nlc


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனமானது நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரித்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகித்து வருகிறது. 
 

இந்நிறுவனத்தில் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் பழுப்பு நிலக்கரியானது திறந்த வெளி சுரங்கம் மூலம் வெட்டி எடுக்கப்படுகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு முதலாவது சுரங்கமும், 2010 ஆம் ஆண்டு இரண்டாவது சுரங்கமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரண்டு சுரங்கத்திற்கும் நிலம், வீடு கொடுத்த விவசாயிகளுக்கும், அக்குடும்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைகள் கொடுக்காமலும், உரிய இழப்பீடு வழங்காமலும்  பொதுமக்களின் வாழ்வாதரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. 


 

nlc



இவற்றிற்காக பொதுமக்கள், ஒப்பந்த தொழிலாளர்கள்,  விவசாயிகள், அரசியல் கட்சினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. 
 

மேலும் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுரங்கத்தினால் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 500-அடிக்கு கீழே சென்றுவிட்டதினால் விவசாயம் முற்றிலும் பாதித்து வருகிறது.
 

இந்நிலையில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் என்.எல்.சி.. ஈடுப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி குள்ளாகியுள்ளனர்.


 

nlc



விருத்தாசலம், புவனகிரி வட்டங்களில் உள்ள கம்மாபுரம், தர்மநல்லூர், தேவங்குடி உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4891.99 ஏக்கரில் மூன்றாவது சுரங்கம் அமைத்து 11.5 மில்லியன் மின் உற்பத்தி செய்வதற்கு என்.எல்.சி நிறுவனம் நிலம் மற்றும் வீடுகளை கையகபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
 

அதற்காக பொதுமக்களின் கருத்து கேட்பதற்காக நெய்வேலி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், மற்றும் என்.எல்.சி நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
 

இதில் கலந்த கொள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000-த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் திரண்டனர்.


 

nlc



முன்னதாக கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு வந்த விவசாயிகள், மூன்றாவது சுரங்கம் வேண்டாம் என்றும், நிலம் கையகப்படுத்த விடமாட்டோம் என்றும் முழக்கங்கள் எழுப்பி கொண்டும், கருப்பு பேட்ச் அணிந்து கொண்டும் வந்தனர். 
 

கடலூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அமைதியாக செல்லுங்கள் என்று கூறியதன் பேரில், அனைவரும் அரங்கிற்குள் சென்றனர். 
 

பின்னர் என்.எல்.சி. அதிகாரிகள் மூன்றாவது சுரங்கம் அமைப்பதன் நோக்கம், மற்றும் செயல் வடிவ திட்டத்தினை திரை வடிவில் காண்பித்தனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 


 

nlc



இதில் சுரங்கத்தினால் பாதிக்கப்பட்ட, பாதிப்பு அடைய போகிற விவசாயிகள் என அனைவரும், தங்களுக்கு மூன்றாவது சுரங்கம் வேண்டாம் என்றும், அவ்வாறு நிலம் கையகப்படுத்த முற்பட்டால், கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், அதையும் மீறி செயல்பட்டால் வீட்டிற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து பேசினர். 

 

மேலும் ஏற்கனவே இரண்டு சுரங்கம் அமைக்கப்பட்ட போது, விவசாயிகளுக்கும், நிலம் இழந்தவர்களுக்கும் ஒன்றும் செய்யாத மத்திய அரசும், என்,எல்சி நிறுவனமும், மூன்றாவது சுரங்கத்திற்கும் மட்டும் என்ன செய்திட போகிறது என்பதினால், எங்களுக்கு மூன்றாவது சுரங்கம் வேண்டாம் என்றும், எங்கள் பகுதியில் இருந்து, மூன்றாவது சுரங்கத்திற்கு, ஒரு பிடி மண்ணை கூட என்.எல்.சி நிறுவனத்திற்கு தரமட்டோம் என்றும் ஒருமித்த குரலில் உறுதியாக  கூறினர். கிராம மக்களின் உறுதியை கண்டு அதிகாரிகள் திகைத்தனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்