போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.