சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்( வயது 75) உடல் நலக்குறைவால் நெல்லையில் காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார். இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘’தோப்பில் முகமது மீரான் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 1997ல் வெளிவந்த அவரது சாய்வு நாற்காலி என்னை மிகவும் கவர்ந்தது. மிகச்சிறந்த இந்த நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோபு, அஞ்சுவண்ணம் தெரு போன்ற புதினங்களும், பல சிறுகதை தொகுப்புகளும் ஆய்வுக்கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நூல்களும் படைத்துள்ளார்.
மதிமுக இலக்கிய அணி சாரில் நடத்திய விழாவில் பங்கெற்று அவர் ஆற்றிய உரை இன்னமும் என நெஞ்சில் நிழலாடுகிறது. தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு காட்டிய அவருடைய உயரிய பண்பாடு என்றென்றூம் நன்றிக்கு உரியதாகும்’’என்று தெரிவித்துள்ளார்.