தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்கப் பொருளாளர் கார்த்தி 67ஆவது சங்க பொதுக்குழு கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாகவும் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனிடையே கடந்த 22 ஆம் தேதி சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளைத் தொடர்வதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன், சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.