திமுகவின் சட்டத்துறை சார்பில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அரசியல் அமைப்புச் சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற சட்ட கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர் எம்.பி என்.ஆர். இளங்கோவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார்கள்.
மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் எம்.பி பேசுகையில், “நேற்று முன்தினம் சென்னை, நேற்று திருச்சி, இன்று மதுரை என்று தொடர்ந்து சட்ட கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டு, ஆளுநர் யார்? அவருடைய அதிகாரம் என்ன? என்பது குறித்து விளக்கிட வேண்டும் என்பதுதான் இலக்கு. அரசியலமைப்பு சட்டத்தை உள்வாங்கி அதை முழுவதுமாக புரிந்துகொள்ள ஒரு வழக்கறிஞரின் வாழ்நாள் போதாது. அம்பேத்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் குழு, அரசியலமைப்பு குறித்த விவாதங்களில் ஈடுபட்டபோது, ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட வேண்டுமா? அல்லது ஆளுநரும் மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஆளுநருக்கும் தேர்தல் வைத்தால் முதல்வரும், ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால் மாநில அரசாங்கம் செயல் இழந்துவிடும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அம்பேத்கர் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் தரப்போவதில்லை என்று கூறுகிறார். சில இடங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு அளிக்கப்படுகிறது. எனவே அது தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே கடந்த 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளில் மிகத் திறமையாக முதல்வர் செயல்பட்டு தீர்மானங்களை நிறைவேற்றினார். அது எப்படி முடியும் என்ற கேள்வி வரும், ஆனால் அவர்களுக்கு அது புரியாது. எனவே அரசியலமைப்பு குறித்த தீயை கொண்டு சேர்க்க வேண்டியது வழக்கறிஞர்களாகிய உங்கள் ஒவ்வொருவருடைய கடமை என்று கூறினார்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசுகையில், “இது சட்ட பிரச்சனை அல்ல; சமூக பிரச்சனை. இது வழக்கறிஞர்களுக்கானது இல்லை; பொதுமக்களுக்கானது. ஆளுநர் வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் நமக்கு வேண்டியதுதான். ஆளுநர் என்ற பொறுப்பு, ஆங்கில மொழி, பழக்க வழக்கம், உடை, என்று எதுவும் வேண்டாம் என்பதை நான் வழிமொழிகிறேன். ஆங்கிலேயர் கொண்டு வந்த ஆளுநரும் வேண்டாம் என்று நான் கூறுகிறேன். ஒன்றிய அரசும், மாநில அரசும் செயல்பட பாலம்தான் ஆளுநர். ஆனால் அவர் நான் தபால்காரரா என்று கேட்கிறார். நாட்டின் நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு எதற்கு தாடி என்று கேட்டார். நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் மஹாராஷ்டிராவின் ஆளுநராக 1962 முதல் 1964 வரை இருந்தவர். 1964க்கு பிறகு விலகியவுடன், அவர் இந்த ஆளுநர் என்ற பதவிக்கு இவ்வளவு அதிகாரமும், வசதியும், அரசாங்க ஊதியமும், இவ்வளவு தேவையற்ற செலவு இருப்பது குறைக்கப்பட வேண்டும் என்று கூறினார். பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற பெயரில் ஆளுநர் உள்ளே நுழைந்து அவர்களுடைய சித்தாந்தத்தைப் புகுத்தி மாணவர்களின் சிந்தனையை மாற்றலாம். அடுத்த தலைமுறையை அவர்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள் என்று பேசினார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் பேசுகையில், “1835 ஆம் ஆண்டுக்கு முன்னர் சமஸ்கிருதம், அரேபிய மொழி இரண்டையும் சொல்லிக் கொடுப்பதற்காகவே கல்வி நிதி 1 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. மெக்காலே என்ற அறிஞர் கூறுகையில் இந்த கல்வி முறை தோற்றத்தில் இந்தியர்கள் போல் இருந்தாலும் அவர்களை ஐரோப்பியர்கள் போல் சிந்திக்க வைப்பது இந்த கல்வி முறை என்று கூறினார். பொதுவாக மாநில ஆளுநர்கள் தேர்வு செய்வது 35 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம். கவர்னர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகிய இருவருக்கும் ஒரே உறுதிமொழி தான். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்போதும், எந்த சூழ்நிலையிலும் பேணி பாதுகாப்பேன் என்பதுதான். ஆனால் அரசியலமைப்பில் தமிழ்நாடு என்று இருக்கும்போது, நான் தமிழ்நாடு என்று கூறமாட்டேன் என்று சொல்வது ஆளுநர் அளித்த உறுதிமொழிக்கு எதிரானது. இது அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் உரிமை மீறல் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். சட்டமன்றத்தின் ஒரு பகுதிதான் ஆளுநர். சட்டமன்றத்தில் ஏற்படுத்திய சட்டங்களுக்கு கையெழுத்துப் போடமாட்டேன் என்று கூறுவது தவறு. ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் ஆளுநர் ஒரு சிறப்புரை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பில் உள்ளது. இங்கிலாந்தின் அரசியலமைப்பைத்தான் நாம் பின்பற்றி வருகிறோம். அதன்படி அரசின் கொள்கைகளை இந்திய அரசியலமைப்பில் பின்பற்றப்பட்டு ஆளுநர் அறிவிப்பார்.
இங்கிலாந்து சட்டமன்றத்தில், அந்நாட்டின் மன்னர் எதற்காக ஆளுநரை இந்த கூட்டத்திற்கு அழைத்துள்ளோம் என்று கூறுவார். அதைத்தான் நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம். அதில் ஏற்கனவே இந்த ஆண்டில் செயல்படுத்தப் போகும் திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்து பதிவிடப்பட்டிருக்கும். அந்த தகவல்களைப் படிப்பது மட்டும்தான் ஆளுநரின் பணி. அரசு கொடுத்ததை விட்டு படித்தால் தவறு, அதில் இல்லாததை சேர்த்து படித்தால் பெரிய தவறு. ஆளுநருக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. அரசு என்ன எழுதி கொடுக்கிறதோ அதை படிப்பது தான் அவருடைய வேலை. அவர் ரப்பர் ஸ்டேம்ப் தான். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பது என்பது விதிமுறை. ஆனால் ஆளுநர் அதை முழுமையாக படிக்காமல் பாதியிலேயே முடித்துவிட்டார். சட்டமன்றத்தில் ஆளுநருக்கு நன்றியுரை வழங்க முடியாது. ஆனால் ஆளுநர் படித்த அனைத்தும் எப்போது அச்சடிக்கப்பட்டதோ அப்போதே அது படித்ததற்கு சமம் என்று தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகச் சரியானது. எனவே ஆளுநர் அரசு அச்சிட்டு கொடுப்பதை படிப்பதற்கான பணிக்காக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதில் எதையும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், மத்திய மாவட்டச் செயலாளர் தினகரன், வைரமணி, மணிராஜ், பரந்தாமன், பச்சையப்பன், சூர்யா வெற்றி கொண்டான், இளங்கோ, வழக்கறிஞர் அந்தோணி ராஜ், கவியரசன், மணிபாரதி உட்பட சட்டத்துறை வழக்கறிஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் நாகராஜ், போட்டோ கமல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.