Skip to main content

பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதி? - சிபிஐ விசாரனை கோரிய  ராமதாஸ்

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
Ramadoss demands CBI probe into woman ADGP Kalpana Naik case

காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறை ஏ.டி.ஜி.பி ஒருவரே முறைகேடு நடந்ததாக கூறியிருப்பது ஐயத்தை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக  தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவருமான கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று  ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறை ஏ.டி.ஜி.பி ஒருவரே முறைகேடு நடந்ததாக கூறியிருப்பது ஐயத்தை அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த  2023-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில்   நடத்தப்பட்ட தேர்வில்  இட ஒதுக்கீடு முறையாக  கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.  அது தொடர்பான  வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால்,  அதிலும் குளறுபடிகள் இருப்பதால், புதிய பட்டியலை நவம்பர் 18-ஆம் தேதி  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 28-ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை.

இந்த நிலையில் தான், காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கையை தாம் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் தயாரித்து அளித்ததாகவும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்றும் காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் நடந்த தவறுகளை தாம் சுட்டிக்காட்டிய பிறகு தயாரிக்கப்பட்ட புதிய பட்டியலை கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் நாள் தாம் சரிபார்க்கவிருந்ததாகவும், அதற்காக தாம் அலுவலகம் செல்வதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமது அலுவலக அறை தீப்பிடித்து எரிந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கல்பனா நாயக், அது தம்மை படுகொலை செய்வதற்காக நடந்த சதி என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவாலிடம் அளித்துள்ள புகார் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தம்மை படுகொலை செய்யும் நோக்கத்துடன் தமது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதற்கு அடுத்த நாளே, திருத்தப்பட்ட பட்டியல் தமது ஒப்புதல் பெறாமல் வெளியிடப்பட்டதாகவும் அந்த புகாரில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.   தம்மை படுகொலை செய்ய நடந்த சதி குறித்து  காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் கொடுத்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று  தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாததற்கும், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கல்பனா நாயக் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்பது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டியதும்,  காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படுவதும்  அவசியமாகும்.  

அதேபோல், காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக கல்பனா நாயக்கை படுகொலை செய்யும் நோக்குடன் அவரது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது  உடனடித் தேவையாகும்.  எனவே, உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்