திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த வசந்தா கென்னடி என்பவர் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வசந்தா கென்னடி உடல்நலம் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இதனையொட்டி ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஐ.பெரியசாமி வசந்தா கென்னடி வீட்டிற்குச் சென்று உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
வசந்தா கென்னடி மருத்துவமனையில் இருந்தபோதும்கூட, அவரது உடல்நல குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கடி விசாரித்து வந்துள்ளார். தற்போது பூர்ண குணம் அடைந்த பின்பு அவரது இல்லத்திற்கு வந்த ஐ.பெரியசாமி உடல் நலம் குறித்து விசாரித்ததோடு ஆத்தூர் தொகுதியில் கட்சி பற்றுடன் கட்சிக்காக உழைக்கும் மகளிர்களில் வசந்தா கென்னடியும் ஒருவர் என்றதோடு மருத்துவச் சிகிச்சைக்கான உதவிகளைச் செய்தார்.
என். பஞ்சம்பட்டிக்கு வந்த அமைச்சராய் பெரியசாமியிடம் பொது மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்ட மூலம் வீடுகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்கள் மத்தியில் அமைச்சர் ஐ பெரியசாமி பேசும்போது, “கலைஞரின் கனவு இல்லத் திட்டம் வீடுகள் உடனடியாக வழங்கப்படும். திமுக தலைவர் மு க ஸ்டாலின் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கோடு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் விரைவில் குடிசை இல்லா தமிழகமாக மாறும். 2024-25ம் ஆண்டிற்கான கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மூலம் வீடு வாங்கியவர்கள்; மார்ச் மாதத்திற்குள் கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மூலம் கட்டப்பட்ட புது வீட்டில் குடி இருப்பார்கள். முன்னால் முதல்வர் கலைஞர் வளர்க்கப்பட்ட நாங்கள் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனின் குடும்பத்தையும் பாதுகாத்து வருகிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னபடி அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளையும் இதர உதவிகளையும் செய்து வருகிறேன்” என்று கூறினார்.
நிகழ்ச்சியின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அமைச்சரின் உதவியாளர் ஹரிகரன், அகரம் பேரூராட்சிமன்ற தலைவர் நந்தகோபால், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் வாஞ்சிநாதன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உலகநாதன், அரசு ஒப்பந்ததாரர் கென்னடிஉட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.