Skip to main content

“வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
Chief Minister M.K.Stalin post on Anna's memorial day

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு தினம் இன்று (03-02-25) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார். வாலாஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை பேரணியாக வந்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இந்த நிலையில், அண்ணா நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”

தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்! நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்