தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் இருந்து தான் கடைமடைப் பகுதிகளான நாகுடி வாய்க்கால், செருவாவிடுதி வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். முறையாக தண்ணீர் இந்த இடத்தில் இருந்தே திறக்கப்படும். அதே இடத்தில் தான் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், குரும்பிவயல், முடுக்குவயல் வழியாக சுமார் 5 கி.மீ தூரத்திற்கு பாசனத்திற்காக வந்து கொண்டிருந்த வாய்க்கால் சீரமைப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பாலும் காணாமல் போய் இருந்தது.
இதனைப் பார்த்த நெடுவாசல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் பாசனம் பெறும் விவசாயிகள் இணைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தங்களின் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து தண்ணீரை கொண்டு வந்தனர். அந்த வாய்க்காலில் தண்ணீர் வந்ததால் நெடுவாசல் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதில் சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் கிராம விவசாயிகள், இளைஞர் மன்றத்தினர் சம்மந்தப்பட்ட வாய்க்காலை மறு சீரமைப்பு செய்யவும், சீரமைக்காமல் உள்ள வாய்க்காலை சீரமைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை கல்லணை கோட்ட அதிகாரிகள் ரூ. 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்தப் பணியால் இந்த ஆண்டு தண்ணீர் கொண்டு வந்து பாசனத்திற்கு மட்டுமின்றி நெடுவாசல் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பினால் நிலத்தடி நீரை உயர்த்த முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் சில நாட்களுக்குள் கல்லணையில் தண்ணீர் நிரம்பி உடனடியாக தண்ணீர் திறந்தால் சீரமைக்கப்படாமல் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வராமல் போகும். அதனால் வாய்க்கால் சீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி உடனடியாக தூர்வாரினால் பாசனத்திற்கும், நெடுவாக்குளம், உள்ளிட்ட குளம், ஏரிகளில் தண்ணீரை நிரப்பலாம். அதனால் தான் நெடுவாக்குளத்தை நெடுவாசல் நீர்பாசனக்குழுவினரே சொந்த செலவில் சீரமைத்து வருகிறோம். ஆகவே உடனடியாக பணிகள் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் வந்த பிறகு பணிகள் முழுமையாக செய்வது கடினமாக இருக்கும் என்றனர்.