144 prohibitory order in Madurai

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதுரை மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த இரண்டு புனித தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisment

இதையடுத்து, ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளை சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி நாளை (04-02-25) போராட்டம் நடத்த இருப்பதாக இந்து அமைப்பினர் அறிவித்தனர். ஆனால், இந்து அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் நடத்த உள்ள போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர், இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை வெளியூர் நபர்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. பொது அமைதியை பாதுகாக்கும் விதமாக போராட்டங்கள், கூட்டங்கள், தர்ணாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’என்று தெரிவித்துள்ளார்.

Advertisment