பாஜக பிரமுகர் கே.டி. ராகவனின் தனிப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கே.டி.ராகவனின் வீடியோ பற்றி கருத்து தெரிவிக்கும்போது, “அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை! அவருக்கேத் தெரியாமல் அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவை வைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூக குற்றம்! அதைச் செய்து வெளியிட்டவரைத் தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்றை இவர் செய்துவிட்டார் என்பது போல காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “சீமான் அவர்களின் இந்த கருத்து "பெண்களிடம் நாங்கள் இப்படித்தான்" என்று நேரடியாக ஆணாதிக்க உணர்வோடு கூறுவது போன்று உள்ளது. சீமானை நம்பி வாக்களித்த பெண்களும் கட்சியில் உள்ள பெண்களும் சிந்திக்க வேண்டிய தருணம்.
மாற்று அரசியல் பேசி 30 லட்சம் பேரை ஏமாற்றிய சீமான், பெண்களை இழிவாக எண்ணும் தங்களது கீழ்த்தரமான புத்தி வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது. யாரும் செய்யாத செயலை செய்தாரா என்பது பற்றி பேசுபவன் யாராக இருப்பான் என்றால் அந்த குற்றங்களை பலமுறை செய்யும் பக்கா குற்றவாளியாகவே இருக்க முடியும்.
யாருடைய கை கூலியாக வேண்டுமானாலும் தாங்கள் இருக்கலாம். ஆனால் பெண்களை பற்றி தங்களுடைய எண்ணவோட்டம் இப்படி இருப்பதை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். உம்மை நம்பி ஏமாந்தவர்களை மீட்பதே இனி என் தலையாய வேலை” என்று தெரிவித்துள்ளார்.