சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக விருச்சிக மரம் போல் வளர்ந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியே 1 லட்சமாக உயர்த்தியவர் எடப்படி பழனிசாமி. நம்முடைய இலக்கு டெல்லி. அடுத்தது தமிழ்நாடு. அதிமுக ஆட்சியில் 15 நாட்களுக்கு முன்பே பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு தற்போது வரை அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கேயிருக்கும் அதிகாரிகள் ஏன் உரிமம் கொடுக்க மறுக்கிறார்கள்? பட்டாசு ஆலை அதிபர்களும் பட்டாசு தொழிலாளர்களும் திமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பட்டாசு தொழிலை கெடுக்கின்ற பணியை திமுக செய்தால், அதைத் தடுக்கின்ற பணியை அதிமுக செய்யும். தமிழ்நாட்டில் திமுக அரசு இருக்கிறதா? இல்லையா? இந்த அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது.
தற்காலிகப் பட்டாசு கடைகளுக்கு உடனடியாக அனுமதி கொடுக்காவிட்டால், அதிமுக சார்பாக பல்வேறு அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். திமுக ஆட்சியின் கதவுகள் தட்டப்படும். சாலையில் விபத்து நடக்கிறது. அதற்காக சாலையை மூடி விடுகிறோமா? வெடி விபத்து நடக்கிறது என்பதற்காக பட்டாசு தொழிலை முடக்க நினைப்பதா? உரிமம் பெறுவதற்காக விற்பனையாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
நமது உழைப்பு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக அமர வைப்பது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமி அடையாளம் காட்டுபவர் பிரதமராக வரவேண்டும். அல்லது.. அவரே பிரதமராக வரவேண்டும். எடப்பாடி பழனிசாமியைக் கண்டு திமுக அஞ்சுகிறது. திமுக ஆட்சிக்கு ஆப்பு வைக்கவேண்டும். வெற்றி நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.” என்றார்.