கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாக விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆதி, கணேசன், எழில்குமார் மற்றும் போலீசாருடன் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு தகர சீட் போடப்பட்ட ஒரு கொட்டகையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை கையும், களவுமாக பிடிக்க போலீசார் விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த மது விற்பனையாளர்கள் அப்படியே மதுபாட்டில்களை போட்டுவிட்டு ஓடி தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து 150 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் அந்த பாட்டில்களை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். அதில் புதுச்சேரியிலிருந்து 47 ரூபாய் விலைப்பட்டியல் மற்றும் புதுச்சேரி மாநில அரசு என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த பாட்டில்களை அப்படியே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மது பாட்டில்களை போல் 110 ரூபாய் எனவும், வேறு கம்பெனியின் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டில்களில் ஒட்டப்படுவதற்காக வைத்திருந்த 992 ஸ்டிக்கர் லேபிள்கள், 90 புதுச்சேரி அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குவார்ட்டர் மது பாட்டில்கள் மற்றும் 60 தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவைகளை விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஸ்டிக்கர்கள் அனைத்தும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் தயாரிக்கப்பட்டவை என்பதால், அந்த பிரின்டிங் பிரஸ்ஸின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபான பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.