கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ளது மாளிகைமேடு. இந்த கிராமத்தை சேர்ந்த திருசங்கு இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகன் மணிகண்டன். கார் டிரைவரான மணிகண்டனுக்கு சின்னத்திரை நடிகை புவனேஸ்வரியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் குடும்பம் நடத்தி வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து பெற்றோர்களைப் பார்த்து செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த மாதம் ஊருக்கு வந்து தங்கியுள்ளார் மணிகண்டன். அப்போது கடந்த மாதம் 12ஆம் தேதி திருசங்கு, பச்சையம்மாள், மணிகண்டன் மூவரும் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்று உள்ளனர். மாலை திருசங்கு மட்டும் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் களவு போய் இருந்தது கண்டு திடுக்கிட்டார்.
இதையடுத்து திருசங்கு கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அவரது விசாரணையில் சொந்த வீட்டிலேயே திருசங்கு மகன் மணிகண்டன் பெற்றோர்கள் வயலில் இருக்கும் போதே அவர்களுக்கு தெரியாமல் வீட்டிற்கு வந்து நகைகளை திருடி சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக மணிகண்டனை கைது செய்த போலீசார் 18 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர். அப்போது நடைபெற்ற போலீசாரின் விசாரணையில் மணிகண்டன், தனது மனைவி புவனேஸ்வரி சொந்தமாக சின்னத்திரை சீரியல் தொடர் இயக்கவும் அதை தயாரிக்கவும் மேலும் ஆடம்பர வாழ்க்கைக்கும் பணம் தேவைப்பட்டதால் மணிகண்டன் மனைவி புவனேஸ்வரி உடன் சேர்ந்து திட்டமிட்டு சொந்த வீட்டிலேயே திருடிவிட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சின்னத்திரை நடிகை புவனேஸ்வரியை பண்ருட்டி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புவனேஸ்வரி, முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில் உயர்நீதிமன்றம் புவனேஸ்வரிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதோடு நேற்று முன்தினம் புவனேஸ்வரி கோர்ட்டில் சரணடைந்தார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கற்பகவல்லி நடிகை புவனேஸ்வரி பண்ருட்டி காவல் நிலையத்தில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று காலை பண்ருட்டி காவல் நிலையத்திற்கு புவனேஸ்வரி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார்.