திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே நடகோட்டை கிராமம் பகுதியில் 500- க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்களையும், அதிலுள்ள ஓடைகள் ஊரணிகள் குளங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பூமி தான நிலங்களை தனியார் சோலார் மின் உற்பத்தி ஆலை நிர்வாகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அசுர வேகத்தில் பணி செய்வதைக் கண்டித்து ஆறு மாதத்திற்கு மேலாக அப்பகுதி கிராமப் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தபட்ட உடன்படிக்கை மற்றும் உத்தரவாதத்தை மீறி நிலக்கோட்டை வட்டாட்சியர் சட்ட விரோதமாக வழங்கிய என்ஒசி-யினால் (வேலை செய்வதற்கான தடையில்லா சான்று வழங்கி) ஆலை நிர்வாகம், கடந்த ஒரு வாரமாக பணியை அசுர வேகத்தில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்தப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அமைதிப் பேச்சுவார்த்தை உடன்படிக்கையை மீறி சட்டவிரோதமாக வழங்கிய என்ஒசி-அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் பெண்கள் உட்பட 100- க்கும் மேற்பட்டோர் இன்று (14/04/2022) நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
ஆனால் வட்டாட்சியர் உறுதியான தகவல் அளிக்க மறுத்ததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து திண்டுக்கல் கோட்டாட்சியர் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஆனாலும் தங்களின் கோரிக்கைக்கு முடிவு கிடைக்கும் வரை வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேற போவதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.