கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்களது நகைகளை ஒப்படைக்கக் கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 493 விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக 1790 பவுன் தங்க நகைகளை அடமானம் வைத்திருந்தனர். அந்த நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறி திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி அலுவலர் துணையுடன் நகை கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதன் காரணமாகக் கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகளிடம் அவர்களது நகைகளை ஒப்படைக்காமல் அதிகாரிகள் காலந்தாழ்த்தி வந்தனர். இதனால் தங்களது நகைகளை ஒப்படைக்கக் கோரி விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் எடுக்கவில்லை.
இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் நேற்று காலை திருநாவலூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகை இடுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே போலீசார் தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு வங்கி முன்பு திரண்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திருநாவலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.