சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ க்கு மாற்றக் கூடாது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகளே விசாரிக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். " தமிழகத்தில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த கோயில்களின் விலை மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகள் காணாமல் போய் உள்ளது. இதை கண்டு பிடிக்க உயர் நீதி மன்ற வழிகாட்டுதல்படி பொன்.மாணிக்கவேல் சிறப்பான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சிலை கடத்தலில் அரசியல்வாதிகள் , அமைச்சர்களின் தலையீடு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கவே வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முயற்சி மேல் கொள்கிறது. தமிழக அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எந்த இடையூரும் இல்லாமல் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரே வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும்." என்றார்.