நெல்லை மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் தாமிரவருணி, நெல்லையப்பர், நெல்லைத் தமிழ், இருட்டுக்கடை அல்வா ஆகியன வரிசையில் சைவ உணவகம் ஒன்றிற்கும் இடமுண்டு. 1924ம் ஆண்டு துவங்கி நூற்றாண்டை எட்டிப் பிடிக்கக் காத்திருக்கும் இந்த சைவ உணவகத்தினை அறியாத தமிழ் இலக்கியவாதிகளையும், அரசியல்வாதிகளையும் விரல்விட்டே எண்ணி விடலாம். அத்தகைய சிறப்பு மிக்கது தான் அந்த சைவ உணவகம்.
அனைவரையும் சுண்டி இழுக்கும் இருட்டுக்கடை அல்வா இருப்பது சன்னதிக்கு வலப்புற எதிரில். இந்த சைவ உணவகம் இருப்பதோ சன்னதி வாசலில் உள்ள ஆர்ச் அருகே.! நெல்லை ஜங்க்ஷனிலிருந்து ஈரடுக்கு மேம்பாலத்தைத் தாண்டி ஏறி இறங்கினால் தெரிவது நெல்லையப்பர் கோவில் ஆர்ச்சின் அருகிலுள்ள அந்த பழமையான உணவகம்.
மற்றைய உணவகங்களைப் போல ஏ.சி.குளிரூட்டப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படவில்லை இது. வெறும் தென்னங்கீற்றுகளால் பின்னப்பட்ட முகப்பு நம்மை வரவேற்க, உணவகத்தின் இரு பக்கத்திலும் நான்கு, நான்காக 8 நபர்கள் மட்டுமே அமரும் அளவிற்கு நீள பெஞ்ச்.! காத்திருந்து தான் இடம் பிடிக்க வேண்டும் அங்கு.!
அனைவரும் பார்வைக்கும் தெரியுமளவில் விலைப் பட்டியல். இட்லி, தோசை, பூரிக்கிழங்கு வரிசையில் இறுதியாக இடம் பிடித்திருக்கின்றது இட்லிப் பொடி அதற்கு இணையான நல்லெண்ணெய்க்கு தனியாக ரூபாய் செலுத்த வேண்டுமென அதனுடைய விலைப் பட்டியலையும் சேர்த்துள்ளது உணவக நிர்வாகம். இருப்பினும் ஏன் இந்தக் கூட்டம்..?
" வீட்டிலயே வறுத்து இடித்துத் திரிக்கப்பட்ட மசாலாவை கொண்டு தான் சாம்பாரே தயாரிக்கப்படுகின்றது. அதனால் தான் இடி சாம்பார் என்று பெயர்.! அது போல் மற்றைய உணவகங்கள் போல் இல்லாமல் இங்குள்ள தேங்காய் சட்னி தேங்காயில் உள்ள பின் தோளோடு இருக்கும். அம்பை 16 அரிசி, நல்ல உளுந்து ஒரு கிலோ 300 கிராம் போட்டு அறைத்து எடுத்தால் மல்லிகைப்பூ இட்லி வரும். இது யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம்.
அது போக நன்னாரிப்பால். பொதுவாக பாலுடன் நன்னாரியைக் கலக்கும் போது திரண்டு விடும். அங்கு அப்படி கிடையாது. பாலுடன் இணையாக நன்னாரி சேர்ந்துவிடும். இங்குள்ள அனைத்து உணவும் வீட்டுப்பதத்திலேயே செய்வதாலும், பழமை மாறாமல் இருப்பதாலுமே இவ்வளவுக் கூட்டம். !" என்கிறார் திருநெல்வேலி ஹோட்டல் அசோசியேசனை சேர்ந்த கிருஷ்ணகுமார். அந்தப் பக்கம் சென்றால் இருட்டுக்கடை அல்வாவுடன், இந்த நன்னாரிப்பாலையும் டேஸ்ட் செய்து பாருங்களேன்.!!!