தமிழர்களின் பொங்கல் திருநாளன்று மக்கள் வீடுதோறும் பொங்கல் வைத்து அதன் பின் மஞ்சள் கரும்புகளை வைத்து சாமி கும்பிட்டு விட்டு, அதை சாப்பிடுவார்கள். அதுபோல் மாட்டுப்பொங்கலை முன்னிட்டும் கிராமங்கள்தோறும் ஆடு மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணங்கிவிட்டு கரும்பு சாப்பிடுவது வழக்கம். இப்படி நகர முதல் கிராமங்கள் வரை பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கரும்புகளை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்படி கரும்புகளை சாப்பிட்டுவிட்டு உடனடியாகவும் தண்ணீரையும் குடிப்பார்கள். ஆனால் கரும்பு சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்க கூடாது என்ற பேச்சு நெடுங்காலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இது குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் கீர்த்தனாவிடம் கேட்டபோது, "சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பு சாப்பிடலாம். இந்த பொங்கல் நேரத்தில் பலரும் கரும்பு சாப்பிட்டுவிட்டு நாக்கில் புண் ஏற்பட்டு அவதிப்படுவது உண்டு. பொதுவாக கரும்பு சாப்பிட்டதும் கால் மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படும் கால்சியம் அதிகம் இருக்கிறது.
இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில் தண்ணீர் குடித்தால் அதிகமான சூட்டைக் கிளப்பும். இதனால் வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்பளங்கள் தோன்றும். அதோடு நாக்கும் புண்ணாகும். கரும்பு சாப்பிட்டதும் சிறிது நேரம் கழித்து விட்டு தண்ணீர் குடித்தால் இந்த பாதிப்பு வராது. கரும்பில் அதிக அளவில் கால்சியம் மெக்னீசியம் சத்துக்கள் இருப்பதால் வலிமையான எலும்புகள் மற்றும் பற்களில் இருக்கும் பொட்டாசியம் சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. கரும்பு சாறு குடிப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும். தோல் சுருங்கி வயதான தோற்றம் வராமல் தடுக்கும்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கரும்பின் வேரை நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து குடிப்பதால் சிறுநீரக எரிச்சல் சரியாகும். தினமும் கரும்பு சாறு குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியையும்
தரும்" என தெரிவித்தார்.