ராமநாதபுரத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உணவில் விஷத்தைக் கலந்து கணவனுக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கணவனை மடியில் படுக்க வைத்து ஆசையாக உணவை ஊட்டுவது போல் விஷம் கலந்த உணவை ஊட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
![incident in ramanathapuram... police arrested women](http://image.nakkheeran.in/cdn/farfuture/_HCDbaA1Pnm7rB5hsG-9RxQZxVnmX7ejqZIbGZf97SE/1567527330/sites/default/files/inline-images/201806271046362357886.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காட்டை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் அத்தியூத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இன்றுவரை குழந்தைப்பேறு இல்லாததால் இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் கணவர் ராமசாமியின் சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்கு மனைவி பஞ்சவர்ணம் கணவனுடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. உறவினர்கள் இருவரையும் சமரசம் செய்ததற்கு பின் கணவனுடைய வீட்டிற்குச் செல்ல பஞ்சவர்ணம் சம்மதித்துள்ளார்.
![incident in ramanathapuram... police arrested women](http://image.nakkheeran.in/cdn/farfuture/9j3Nndt_uHqRcmKOQmyslPE6hjYEyJBhapvDanPsvOw/1567527348/sites/default/files/inline-images/zz100.jpg)
திருவிழாவிற்கு சென்ற இடத்திலும் குழந்தை பேறு இல்லாதது தொடர்பாக மீண்டும் சண்டை ஏற்பட அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தார் ராமசாமியின் சகோதரர் கணேசன். சமாதானப்படுத்தியும் ஆத்திரம் தாளாத பஞ்சவர்ணம் கணவனான ராமசாமியை கொலை செய்ய திட்டமிட்டார்.
![incident in ramanathapuram... police arrested women](http://image.nakkheeran.in/cdn/farfuture/3PcIvoxJTK3QCTmNJgdugQbCOrSizf9fUj_xpPFUGdM/1567527392/sites/default/files/inline-images/thakkali-sadam-recipe-main-photo.jpg)
ஏற்கனவே சண்டை நடக்கும் பொழுது ராமசாமியிடம் அடிக்கடி உணவில் விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று எச்சரிக்கும் தொனியில் மிரட்டுவாராம் பஞ்சவர்ணம். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது திட்டத்தை நிறைவேற்ற நினைத்த பஞ்சவர்ணம் தக்காளி சாதம் முட்டை பொரியல் சமைத்து அதில் எலியை கொல்ல பயன்படுத்தப்படும் விஷத்தை கலந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் கணவனை ஆசையாக மடியில் படுக்க வைத்து உணவை ஊட்டியுள்ளார். நீதான் எனக்கு குழந்தை என்று மனைவி கொஞ்சி பேசியதை நம்பி ராமசாமியும் அந்த உணவில் விஷம் கலந்துள்ளது என்பதை அறியாமல் சாப்பிட்டுள்ளார். ராமசாமிக்கு உணவை ஊட்டி பிறகு வெளியே வந்த பஞ்சவர்ணம் ராமசாமியின் சகோதரரான கணேசன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
![incident in ramanathapuram... police arrested women](http://image.nakkheeran.in/cdn/farfuture/KpkboS6_lBIMiV46tg8uWYKcuvzmgYOJ_XWuxWMKCK0/1567527361/sites/default/files/inline-images/zz101.jpg)
அங்கு கணேசனை சந்தித்து கணவனுக்கு விஷம் கலந்த உணவை ஊட்டி விட்டதை சொல்லி இன்னும் சற்று நேரத்தில் உன்னுடைய சகோதரன் இறந்து விடுவார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதை கேட்டு அதிர்ந்துபோன கணேசன் உடனடியாக ராமசாமியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பஞ்சவர்ணத்தை தேவிபட்டினம் போலீசார் கைது செய்துள்ளனர்.