தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டது. பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று காலை முதல், மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துசாமி தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி, மாநகரச் செயலாளர் சுப்ரமணியம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் பரமசிவம் தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள பெரியார் - அண்ணா நினைவகம் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். ஈரோடு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மண்டலச் செயலாளர் த.சண்முகம் தலைமையில் பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் பாஸ்கர், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்டச் செயலாளர் ஜாபர் அலி, தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் மத்திய மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையிலும், அருந்ததியர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன் தலைமையில் அதன் நிர்வாகிகள் என இப்படி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, "தந்தை பெரியாரின் புகழ் ஒங்குக... பெரியாரின் வழியில் தமிழகம் என்றென்றும் இருக்கும்..." என வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.