தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ. வேலு பொறுப்பேற்றுக்கொண்ட பின் அதிகாரப்பூர்வமாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஜூன் 9ஆம் தேதி வருகைபுரிந்தார். ஜூன் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுசெய்யவுள்ளதாக அறிவித்தார். அதோடு அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார். அதில், “நான் அரசுப் பணிகள் குறித்து இரண்டு தினங்கள் ஆய்வுசெய்யவுள்ளதால் கட்சியினர் யாரும் அங்கு வந்து என்னை சந்திக்கக்கூடாது. தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுத்திட ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நாமே மீறக்கூடாது என வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.
ஜூன் 10ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்துக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ. வேலுவுடன், சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, எம்.பிக்கள் அண்ணாதுரை, விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏக்கள் கிரி, அம்பேத்குமார், ஜோதி, சரவணன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். வந்தவர்களைக் கலெக்டர் சந்திப் நந்தூரி வரவேற்றார். காவல்துறையின் வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதனால் பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பொதுமக்கள் அநாவசியமாக யாரும் வராதவண்ணம் தடுக்கப்பட்டனர்.
பெருந்திட்ட வளாகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு குடும்ப அடையாள அட்டை இல்லாத 332 மூன்றாம் பாலினத்தவருக்கு 2 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரணமும், சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் 275 மகளிருக்கும் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்படி வழங்கும்போது குறைந்தபட்ச தனிமனித இடைவெளியைக்கூட அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை. நலத்திட்ட உதவிப்பெற வந்த பயனாளிகளையும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லவில்லை. சினிமா தியேட்டரில் புதுப்படத்துக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவதுபோல் இருந்தனர். இதனைப் பார்த்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அந்தக் கூட்டத்தில் சேராமல் தனியே பாதுகாப்பாக நின்றுக்கொண்டார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகள் தளர்த்தக் காரணம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்களுக்காகத்தான்’ எனச் சொன்னார். இதனைக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அதிகாரிகள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உயரதிகாரிகளே கூட்டமாக நின்றனர். அதோடு பயனாளிகளையும் தனிமனித இடைவெளிவிட்டு நிற்கச் சொல்லாமல் நிறுத்திவைத்திருந்தனர்.
கடந்த முதல் அலையின்போது, ஆட்சியில் இருந்த அதிமுகவினரும் இப்படித்தான் நடந்துகொண்டார்கள். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் உள்ளது. அதிகாரிகள் தங்களது விஸ்வாசத்தைக் காட்டுகிறோம் என்கிற பெயரில், கொடூர கரோனா அலையிலும் தங்கள் மீதும், மக்கள் மீதும், சக அரசு ஊழியர்கள் மீதும் அக்கறையில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்றால், அமைச்சரும் அதனைக் கண்டும் காணாமல் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.