தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளையும் உடைமைகளையும் சூறையாடிய ஆதிக்க சாதியினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், வீரலூர் கிராமத்தில் இறந்தவரின் உடலை பொதுப் பாதையில் கொண்டு செல்ல தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பகுதி ஆதிக்க சாதியினரிடம் கேட்டதற்காக, அவர்களின் சாதி பெயரைச் சொல்லி திட்டியபடி “எங்களிடம் வந்து கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தெம்பு வந்துவிட்டதா” என்று தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கியுள்ளனர். அதில் இத்தனை ஆண்டு காலமாக உழைத்து உருவாக்கிய அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், “முன்னதாக ஒரு வழக்கில், “கலவரத்துக்கான சூழல் உள்ளது என முன்கூட்டியே தெரிந்தும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அமைதிகாக்கும் பட்சத்தில் அந்த மாவட்டத்தின் ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்” என நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜ் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் இச்சம்பவம் பற்றி முன்னரே அறிந்த காவல் மற்றும் மாவட்ட நிர்வாகத் தலைமையை இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மாநில முதல்வர் நேரில் சந்தித்து நிவாரணம் வழங்குவதோடு உரிய நடவடிக்கையும் எடுக்கவேண்டும். அதே போல இந்தச் சம்பவத்தை இரண்டு சமூகங்களுக்கான சம்பவமாகக் கடந்து போகக்கூடாது. இது மனித சமூகத்திற்கு சீர்கேடு என்பதை அனைவரும் உணரவேண்டும். வன்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தும், நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதியை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் கூட்டணியமைத்து வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ரவுடிகளைக் கலையெடுக்கும் காவல்துறை சாதி வெறியர்களைக் கலையெடுக்க மறுப்பது ஏன்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.