Skip to main content

சடலமாக கிடந்த பெண்ணின் கொலையில் துப்பு துலங்கியது - 5 பேர் அடித்து கொன்றது அம்பலம்

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

Police arrested five in salem women case

 

சேலம் அருகே ரயில் மேம்பாலம் அடியில் சடலமாகக் கிடந்த பெண்ணின் கொலை வழக்கில் துப்பு துலங்கியது. அவரை அடித்துக் கொன்றதாக மூன்று பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

 

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் ரயில் மேம்பாலத்தின் அடியில் இருந்து 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம், கடந்த சில நாள்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்டது. மர்ம நபர்கள் ஒரு போர்வையில் சுற்றி, சடலத்தை வீசிச்சென்றிருந்தனர். பெண்ணின் இடக்கையில் மணிமலர் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. வயிறு, கை ஆகிய இடங்களில் காயம் இருந்தது. 


இதன் அடிப்படையில், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மேற்பார்வையில், தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சடலமாகக் கிடந்த பெண், தர்மபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி மலர் (56) என்பது தெரியவந்தது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி, ஓய்வு பெற்ற மணி, கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். 


கணவருக்குக் கிடைத்த ஓய்வுக்கால பணப்பலன்கள், பென்ஷன் தொகையை வைத்து மலர், உள்ளூரில் வட்டித் தொழில் செய்துவந்தார். கணவன் இல்லாத நிலையில், மலரிடம் கடன் வாங்கிய நபர்கள் யாராவது அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கினர். சந்தேகத்தின்பேரில், கடத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது, மலரிடம் அவர் 1.50 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியது தெரியவந்தது. அசல் மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் மலர் அவரிடம் பணத்தை உடனடியாக செட்டில்மெண்ட் செய்யும்படியும், இல்லாவிட்டால் ஊரைக்கூட்டி மானத்தை வாங்கி விடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.
 

இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், மலரை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை போர்வையில் சுற்றி வைத்து, ராமமூர்த்தி நகர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றிருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 


இந்தக் கொலைக்கு கோவிந்தராஜூவின் தோழி பிரபாவதி (27), தாயார் விஜயகுமாரி (48), அவரது அக்கா புனிதா (30), நண்பர் அன்பானந்த் (4) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து கோவிந்தராஜ் உள்ளிட்ட ஐந்து பேரையும் காவல்துறையினர் ஜூலை 21ம் தேதி மாலையில் கைது செய்தனர். 


முக்கிய குற்றவாளியான கோவிந்தராஜ் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலத்தின் சுருக்கம்; மலரிடம் 1.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அவருக்கு சொன்னபடி உரிய காலத்தில் கடனைத் திருப்பித்தர முடியவில்லை. இதனால் மலர், அடிக்கடி என்னிடம் வந்து பணத்தைக் கேட்டு நச்சரித்தார். ஜூலை 16ம் தேதி, செல்போனில் தொடர்பு கொண்டு என்னை ஆபாசமாக திட்டினார். 


அவரால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறி அவரை கடந்த 16ம் தேதி என் வீட்டுக்கு வரவழைத்தேன். அதை நம்பி அவரும் என் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. மலரை அடித்துக் கொலை செய்து, சடலத்தை என்னுடைய கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தேன். என்னுடைய அக்கா வீட்டிற்கு வந்திருந்தபோது, கட்டிலுக்கு அடியில் சடலம் கிடப்பதைப் பார்த்துவிட்டு என்னை திட்டினார். அதையடுத்து நான், என்னுடைய தோழி பிரபாவதியைத் தொடர்பு கொண்டு, நடந்ததைச் சொல்லி உதவி கேட்டேன். சடலத்தை மறைப்பதற்காக கொஞ்சம் செலவாகும் என்பதால் பிரபாவதியிடம் பணம் வாங்கிக் கொண்டு, அன்று நள்ளிரவு வீட்டுக்கு வந்தேன். 


பின்னர், என் தாயார், அக்கா, நண்பர் அன்பானந்த் ஆகியோரின் உதவியுடன் சடலத்தை ஒரு போர்வையில் சுற்றினேன். அன்பானந்த் கார் ஓட்டி வருகிறார். அதனால் சடலத்தை அவருடைய காரிலேயே கொண்டு சென்று, ராமமூர்த்தி நகர் மேம்பாலத்தின் அடியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே வீசிவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல் சித்தரிக்க முயன்றோம். ஆனால் அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், தண்டவாளத்திற்கு 40 மீட்டர் தொலைவிலேயே சடலத்தைப் போட்டுவிட்டு வந்து விட்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். 


இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவிந்தராஜ், அன்பானந்த் ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையிலும், மற்ற மூன்று பெண்கள் சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களில் புனிதாவிற்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளதால், குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்