Skip to main content

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை; குற்றவாளியோடு போலீசும் மருத்துவரும் கூட்டுச் சதி?

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
 Police and doctor collusion on incident of Friend for insurance money

இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பரைக் கொலை செய்த குற்றவாளியோடு போலீஸும் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டரும் கைகோர்த்தார்களா? என்கிற சர்ச்சை கிளம்பியுள்ளது.

செப்டம்பர் மாதத்திலிருந்து டில்லிபாபு காணவில்லை என அவனது தாயார் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதுதான் இந்தப் பிரச்சனை தொடங்கியது. எண்ணூர் போலீசாரோ டில்லிபாபுவின் தாயாரை அலைக்கழித்துள்ளனர். அதன்பின் டில்லிபாபுவின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்கிறார். நீதிமன்ற உத்தரவின்பெயரில் காணாமல்போன டில்லிபாபு வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் காவல்துறை, டில்லிபாபுவின் செல்போனை கையில் வைத்துக்கொண்டு, டில்லிபாபு உயிரோடு தலைமறைவாக இருப்பதுபோல் நாடகமாடிய சுரேஷ்பாவுவைக் கைது செய்கிறது. 

இந்தச் சுரேஷ்பாபு 1 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்திருந்தவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி குடிசை வீடு எரிந்ததில் சுரேஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை உடற்கூராய்வு முடித்து அவரது வீட்டில் ஒப்படைக்க, அவர் வீட்டினரோ சுரேஷ் என்று சொல்லித் தரப்பட்ட உடலை அடக்கம் செய்துள்ளனர். அவரது வீட்டிலிருந்து காப்பீட்டைப் பெறுவதற்கான முயற்சியில் இருக்கும்போதுதான், டில்லிபாபுவின் தாயார் காவல்துறையை அணுகுகிறார். தான் வாங்கிய 1 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸின் பணத்திற்காக நாடகமாடி தன்னுடைய நண்பனையே கொலை செய்து எரித்ததாக சுரேஷ்பாபுவே ஒப்புக்கொண்டதன் பெயரில் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் எழும் சந்தேகங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எரிக்கப்பட்டிருப்பது தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் டில்லிபாபுவின் பிரேதம்தானா என்கிற சந்தேகமும் எழுகிறது. முதலில் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட சுரேஷ் பிரேதத்தின் மீது விசாரணை செய்த ஒரத்தி போலீசார், பிரேதப் பரிசோதனை செய்த செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் இறந்துபோன சடலம் சுரேஷ் என்பவருடையது தான் என்பதை உறுதிசெய்து அன்றே சான்று வழங்கியுள்ளனர்.

சட்ட விதிப்படி அடையாளம் தெரியாத வகையில் ஒரு பிரேதம் எரிந்தோ, மிகவும் அழுகியோ, விபத்தால் சிதைந்தோ காணப்பட்டால் உடனடியாக பாரன்சிக் மொபைல் டீமுக்கு தகவல் கொடுக்கவேண்டும். அதன் பின்னர், தடயவியல்துறை வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம், என்ன வகையான எரிபொருள் தீ விபத்திற்கு காரணம் என்பதைக் குறித்து தக்க சான்றுகளை சேகரித்துக் கொள்வார்கள். ஆனால், அதுபோன்று இந்தச் சம்பவத்தில் பாரன்சிக் மொபைல் டீமை போலீசார் அழைக்கவே இல்லையாம்.

இறந்துபோன பிரேதத்திற்கு யார் உரிமை கோரினாலும் அந்தப் பிரேதத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புவதற்கு முன்னால், இறந்தது இன்னார்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஆரம்பகட்ட விசாரணை ஒன்றை போலீஸார் மேற்கொள்வர். இறந்து கிடக்கும் பிரேதத்தின் மீது காணப்படும் தழும்பு, மச்சம் போன்ற அடையாளங்கள், பிரேதம் கிடந்த இடம், பிரேதத்தின் மீது காணப்படும் துணி, நகைகள், பழைய காயத்தழும்புகள், நிரந்தரமான உடல் குறைபாடுகள் போன்றவற்றின் மூலம் இறந்தவர் தனது உறவினர்தான் என்று புகார்தாரர் உறுதிப்படுத்துவதோடு, அந்தப் புகார்தாரரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனக் குறைந்தபட்சம் 5 பேரிடம் இறந்தவரது அடையாளம் குறித்து விசாரணை செய்து, விசாரணை அதிகாரி இன்னார்தான் என உறுதி செய்துகொண்ட பிறகே, இறந்து போனவரது பெயர் மற்றும் விலாசத்தைக் குறிப்பிட்டு அவரது பிரேதத்தைப் பிரேதப் பரிசோதனை செய்து இறப்புக்கான காரணம், இறப்பின் தன்மை குறித்து தக்கச் சான்று வழங்கக்கோரி பிரேதப் பரிசோதனை மருத்துவரிடம் விண்ணப்பம் தருவார்.

அதன்படி மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்யும்போது இறந்துபோனது சுரேஷ்தான் என்பதை உறுதிப்படுத்த, இறந்த நபரது அங்க மச்சம், அடையாளம், உடல் குறைபாடு, நகைகள் போன்றவை எதுவுமே இல்லாத சூழ்நிலையில், அந்த உடலிலிருந்து மண்டை ஓட்டையும், தொடை எலும்பையும் சேகரித்து டி.என்.ஏ. பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்தப் பிரேதத்தை உரிமை கோருபவர்களின் டி.என்.ஏ. உடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் இறந்தது இன்னார் என்பதே தெரியவரும்.

மரணம் தற்கொலையாலா? அல்லது கொலையாலா? என்பதை குறித்து ஆய்வு செய்ய, சடலத்திலிருந்து சதைப் பகுதிகளை எடுத்து அதனைப் பேத்தாலஜி துறைக்கு அனுப்பியிருக்கவேண்டும். அதனைத் தொடர்ந்து எந்த வகையான எரி பொருள் மூலமாக தீக்காயம் உண்டானது என்பதற்காக அதே பிரேதத்தில் இருந்து சதைப் பகுதியை எடுத்து தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். இந்த மூன்று பரிசோதனைகளும் சரிவரச் செய்திருந்தால் இறந்தவர் யார் என்பதை உறுதி செய்திருக்க முடியும். ஆனால், மூன்று மாதகாலம் கடந்தும் எண்ணூர் போலீசார் அதை உறுதிப்படுத்தவில்லை. டில்லிபாபுவின் தாயார் கொடுத்த வழக்கால் சுரேஷ் சிக்க, அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகே இறந்தது சுரேஷ் அல்ல டில்லிபாபு என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

சுரேஷின் ஒப்புதல் வாக்குமூலம் ஒருபுறமிருக்க, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரேதம் சுரேஷ் குடும்பத்தாரால் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்ட சூழ்நிலையில், இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. ஒருவேளை பிரேதப் பரிசோதனையானது விஞ்ஞானப்பூர்வ அடிப்படையில் செய்யப்பட்டு இருந்தால் இறந்துபோனது இன்னார் என்றும், இறப்புக்கு உண்டான காரணம், இறப்பின் தன்மை குறித்து கட்டாயம் கண்டறிந்திருக்கமுடியும். ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், போலீஸ் சேர்ந்து செய்த குற்றத்தை மறைப்பதற்காக குற்றவாளியை வைத்தே டில்லிபாபுவை கொலைசெய்து எரித்துவிட்டதாக வழக்கை முடித்துவைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

இதற்கு முன்பாக பல வழக்குகளில் உண்மைக்கு மாறாக பிரேதப் பரிசோதனை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மருத்துவக்  கல்லூரியில் பிரேதப் பரிசோதனை துறையில் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர் முருகேசன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேதத்தைப் பார்க்காமலே விபத்து எனச் சான்றிதழ் தந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீசாரால் பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோவின் அடிப்படையில் கொலைவழக்கு எனப் பிறகு மாற்றம் செய்யப்பட்டது. 

பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் மேல், சென்னை மகளிர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை மேற்படி மருத்துவர் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதேபோல, ஒரு பிரேதத்தைப் பரிசோதனையே செய்யாமல் இயற்கை மரணம் எனக் கூறி சான்றிதழ் கொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் நடராஜன், செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர். இதுபோன்று பிரேதப் பரிசோதனைகளில், முறைகேடுகள் நடப்பது குறித்து அருண் சாமிநாதன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தவறுகள் நடைபெறாமலிருக்க, தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள பிரேதப் பரிசோதனை சான்று படிவத்தை மெட்லியாபிஆர் சாஃப்ட்வேர் வழியாக அன்றைய தினமே நீதிபதிக்கு அனுப்பி வைக்கவேண்டும். 

இவர்கள் நீதிபதிக்கு அனுப்பும் பரிசோதனைச் சான்றிதழில் மேற்சொல்லப்பட்ட நடைமுறைகளில் ஏதாவது ஒன்று விடுபட்டுப்போனாலும், அந்தப் படிவத்தை சாஃப்ட்வேர் நிராகரித்துவிடும். இவர்கள் இந்த அனைத்து பரிசோதனைகளையும் செய்து படிவத்தை முழுமையாக நிரப்பினால் மட்டுமே ஒரு சான்றிதழை நீதிபதிக்கு அனுப்பி வைக்கமுடியும். இந்த நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், உத்தரவு பிறப்பித்து மூன்றாண்டுகள் கடந்தும் நடைமுறைப்படுத்தாத காரணத்தால் இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. அரசு உடனடியாக இதற்குத் தீர்வு கண்டால் வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கமுடியும் என்கிறார்கள் சட்ட, மருத்துவத்துறை நிபுணர்கள்.

சார்ந்த செய்திகள்