Skip to main content

சொத்து முடக்கப் பட்டியலில் ஜெயலலிதாவின் போயஸ் பங்களா! -நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்!

Published on 24/01/2019 | Edited on 25/01/2019
poes garden

 

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றிட,  தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்குத் தடை கோரி டிராபிக் ராமசாமி மற்றும் சென்னையைச் சேர்ந்த எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஜனவரி 3-ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
 

அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அரசு மற்றும் தனியார் சொத்துகளை நினைவில்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என  நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய  வருமான வரி ஏதும் நிலுவையில் உள்ளதா? என்றும்,  வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை உள்ளதா என்பது குறித்தும் ஜனவரி 24-ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்கும்படி  நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 
 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமானது, வருமான வரித்துறையின் முடக்கப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் உள்ளது என்று வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.  நினைவு இல்லமாக மாற்றுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்