Skip to main content

ஊராட்சி மன்ற தலைவி தூக்குப்போட்டு தற்கொலை! வேலையை ராஜினாமா செய்ய சொன்னதுதான் காரணமா?

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Panchayat leader passes away  Is it because she was told to resign from the job?

 

 

பதவியை ராஜினாமா செய்ய, கணவர் வற்புறுத்தியதால் விரக்தி அடைந்த ஊராட்சிமன்ற தலைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்திரா கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஊராட்சி மன்ற தலைவியாகப் பணியாற்றிவருகிறார். 

 

பிரவீன் குமார் தாடிக்கொம்பு சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தென்னை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை நடத்திவருகிறார். இதனால் இவர்கள் இருவரும் தங்களது மகன்களுடன் சென்னமநாயக்கன்பட்டி அடுத்து சண்முகபுரத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்திரா மட்டும் சத்திரப்பட்டிக்கு தினசரி சென்று ஊராட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், சென்னமநாயக்கன்பட்டியிலிருந்து சத்திரப்பட்டி சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இதனால் அவரால் அங்கு சென்று வருவதில் சிரமம் இருந்தது. இருப்பினும் அவர் சத்திரப்பட்டி சென்று ஊராட்சி பணிகளை தொடர்ந்து கவனித்து வந்தார்.

 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியிடம் சத்திரப்பட்டி சென்று வருவது சிரமமாக இருக்கிறது என்றும், தொழிற்சாலையை ஒரே ஆளாக என்னால் கவனிப்பதிலும் சிக்கல் உள்ளது என்றும் கூறி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

 

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 2 பேரும் பேச்சு வார்த்தை இன்றி இருந்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் அவர்களுக்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த இந்திரா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று காலை பிரவீன்குமார் தனது மகன்களை அழைத்துக்கொண்டு பள்ளியில் கட்டணம் செலுத்துவதற்காக சென்றார். 

 

வீட்டில் யாரும் இல்லாத அந்த நேரத்தில் இந்திரா, தனது வீட்டின் உள்பக்க அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த பிரவீன்குமார் தனது மகன்களை வீட்டின் முன்பு இறக்கிவிட்டு விட்டு தொழிற்சாலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டுக்கு சென்ற மகன்கள் தாய் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அழுதவாறு தந்தைக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்தனர். உடனே உறவினர்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதால் ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்